திருப்பூர் தொழிலாளர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

திருப்பூர்: திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்களும் வந்து திருப்பூரில் அறை எடுத்து தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் திலகர் நகர் மேற்கு பகுதியில் தெரு முழுவதும் வடமாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதங்களில் வைரலாகி உள்ளது. அதில், திருப்பூர் திலகர் நகர் மேற்கு பகுதியில் சென்ற தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் துரத்தி துரத்தி தாக்குதல் நடத்துகின்றனர். தாக்குதலில்போது வடமாநிலத்தவர்கள் கல், பெல்ட், கட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு விரட்டி, விரட்டி அடிக்கின்றனர்.

இது குறித்து வேலம்பாளையம் போலீசார் கூறுகையில், ‘உள்ளூர் தொழிலாளர்களுக்கும், வடமாநிலத்தவர்களுக்கும் பேக்கரி ஒன்றில் சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளி சிகரெட் புகையை  தமிழக தொழிலாளி ஒருவரது முகத்தில் ஊதினாராம். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்கியுள்ளனர். பின்னர் வடமாநிலத்தவர்கள் சிலர் சேர்ந்து உள்ளூர் தொழிலாளர்களை தாக்கினர். இந்த விவகாரம் பெரியதாகிய நிலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் வசிக்கும் வீதிக்கு தமிழர்கள் தட்டி கேட்க சென்றபோது அவர்களை வடமாநில தொழிலாளர்கள் சேர்ந்து விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து புகார்கள் ஏதும் வரவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: