×

எல்லையில் கழிவுகள் பிரித்து எடுக்கும் ஆலை: கேரளா அரசு திட்டம், சுகாதாரக்கேடு ஏற்படும் என்று மக்கள் அச்சம்

அருமனை: தமிழக - கேரள எல்லையில் வெள்ளறடை அருகே நூலியம் என்ற இடத்தில் கழிவுகளை பிரித்தெடுக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக - கேரள எல்லையில் கேரளாவின் வெள்ளறடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெல்லுசேரி அருகே நூலியம் என்ற  பகுதி உள்ளது. தமிழகத்தை ஒட்டியுள்ள இந்த பகுதியில் கழிவுகளை பிரித்தெடுக்கும் ஆலை அமைக்க கேரள அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ கழிவுகள், மனித கழிவுகள் என குறைந்தது ஒரு நாள் 60 லோடு கழிவு பொருட்கள் பிரித்தெடுக்கப்பட உள்ளது.

கேரளாவின் பெருங்கிடா யூனியன், பாறசாலை  யூனியன்,  நெய்யாற்றங்கரை முனிசிபாலிட்டி மற்றும் மாறாவட்டம், தொல்லையம், ஆரியன் கோடு, உத்த சேகரமங்கலம், கள்ளிக்காடு, செங்கல்,  காரோடு, வெள்ளறடை, குன்னத்துகால் பஞ்சாயத்து கழிவுகளுடன் நகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளும் இங்கு கொண்டுவந்து பிரித்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் பகுதியில் இருக்கக்கூடிய மருத்துவ  கழிவுகளும் இங்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நெல்லுசேரி நூலியம் கேரளாவுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும் அதனை ஒட்டிய பகுதி எல்லாம் தமிழக பகுதிகளாகும்.

அப்பகுதியில் கழிவுகள் பிரித்து எடுக்கும் ஆலை அமைய இருப்பது சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக கழிவு பொருட்கள் வந்து சேரும் இடம் என்பதால் சுகாதாரக்கேட்டுடன் துர்நாற்றம் வீசும். கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் மற்றும் பிரித்தெடுக்கும் முறைகளின் மூலமாக நச்சுத்தன்மைகள் வெளியே தள்ளக்கூடிய நிலையும் ஏற்படும். அதனால் பல விதமான நோய்கள் மற்றும் மண்வள பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று இரு மாநில மக்களும் அச்சப்படுகின்றனர்.

இதனால் இரு மாநில மக்களும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இப்பகுதியில் தனியாருக்கு அனுமதி வழங்கி தார் உருக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. அதனுடைய பாதிப்புகளால் மக்கள் நீதிமன்றத்தை நாடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் கேரளா அரசே இன்னொரு கேடு விளைவிக்கக் கூடிய ஆலையை அப்பகுதியில் நிறுவ இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags : Kerala government , Waste segregation plant on the border: Kerala government project, people fear that it will cause health problems
× RELATED அதிகரிக்கும் வெயில்; கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6 வரை விடுமுறை!