×

கவர்னர் தமிழிசையுடன் மோதல் முற்றுகிறது: தெலங்கானாவில் குடியரசு தின விழா; முதல்வர் சந்திரசேகரராவ் புறக்கணிப்பு

திருமலை: தெலங்கானாவில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், கவர்னர் தமிழிசையை மாநில முதல்வர் சந்திரசேகரராவ் புறக்கணித்துள்ளார்.
தெலங்கானா கவர்னராக கடந்த 3 ஆண்டுகளாக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார். ஆரம்பத்தில் முதல்வர் சந்திரசேகர ராவுடன் இணக்கமான நட்பு இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அரசு பரிந்துரைத்த எம்எல்சியை, கவர்னர் நிராகரித்ததால் இருவருக்கும் இடையேயான பனிப்போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து முதல்வர் அனுப்பும் மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்ப தொடங்கியதால் இருவருக்கும் மோதல் முற்றியது.

இந்தநிலையில் இன்று குடியரசு தினத்தையொட்டி செகந்திராபாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விழா நடத்தாமல் ராஜ்பவனில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதற்கு மாநில அரசு அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து தெலங்கானா ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்மம் மாவட்டத்தில் நடந்த பிஆர்எஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சந்திரசேகரராவ் உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் மற்றும் பல லட்சம் பேர் பங்கேற்றனர்.

ஆனால் குடியரசு தினவிழாவில் பங்கேற்க மாநில அரசு அனுமதிக்காமல் உள்ளது’ என்று தெரிவித்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட், செகந்திராபாத் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழாவை நடத்த உத்தரவிட்டது. இருப்பினும் மாநில அரசு குடியரசு தினவிழாவை ஆயுதப்படை மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி ராஜ்பவனில் இன்று குடியரசு தினவிழா நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் புறக்கணித்துவிட்டு தனது முகாம் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

முன்னதாக விழாவில் கவர்னர் தமிழிசை பேசுகையில், ‘சிலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் தெலங்கானா மக்களுக்காக எனது பங்களிப்பு, உழைப்பு இருந்துகொண்டே இருக்கும். ஒருசிலர் பண்ணை வீட்டில் இருந்துகொண்டே அனைத்து காரியங்களையும் சாதிக்கவேண்டும் என துடிக்கின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை அனைவருக்கும் பண்ணை இருக்கவேண்டும்’’ என கருதுகிறேன் என்றார்.

Tags : Governor ,Tamilisai ,Republic Day ,Telangana ,Chief Minister ,Chandrasekhar Rao , Clash with Governor Tamilisai ends: Republic Day celebrations in Telangana; Chief Minister Chandrasekhar Rao's boycott
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...