×

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தினவிழா; 212 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர்கள் ஆர்த்தி, ராகுல்நாத் வழங்கினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த குடியரசு  தினவிழாவில், 212 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர்கள் ஆர்த்தி,  ராகுல்நாத் ஆகியோர் வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக  வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் 74வது குடியரசு தினவிழா சிறப்பாக  கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா தலைமை தாங்கினார். கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், போலீஸ் எஸ்பி சுதாகருடன் திறந்த ஜீப்பில் சென்று  காவல்துறை, ஊர்க்காவல்படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட  மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மூவர்ண பலூன்கள் மற்றும் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டு, 71 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, 20 பேருக்கு குடிமனை ஆணை வழங்குதல், 6 விவசாயிகளுக்கு பவர் டில்லர், 4 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 4  பேருக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு உள்ளிட்ட 112 பயனாளிகளுக்கு 2 கோடியே 3 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து, இந்தியாவின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துகொண்ட தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின்  தியாகங்களை போற்றி பாராட்டி, பெருமைப்படுத்தும் வகையில், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

நிகழ்ச்சியின் போது, டிஐஜி பகலவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் கவிதா, கலெக்டரின் நேர்முக  உதவியாளர் புண்ணியக்கோட்டி, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ராமச்சந்திர பிரபு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தேசிய கொடி ஏற்றிவைத்து  மரியாதை செலுத்தினார். பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை   ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்  பிரதீப், துணை காவல் காண்காணிப்பாளர் பரத் ஆகியோர் உடனிருந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, நகராட்சி  துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு  ₹80,13,700  மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், மாவட்ட முதன்மை அமர்வு  நீதிபதி மேவிஷ் தீபிகா சுந்தரவதனா கலந்துகொண்டு, தேசிய கொடி ஏற்றிவைத்தார்.

இதில், நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்டீபன்குமார், செயலாளர் மகேஷ், பொருளாளர் பிரேம்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.  இதேபோன்று செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் நாகராஜ் தேசியகொடி ஏற்றிவைத்தார். இதில், நகராட்சி தலைவர் தேன்மொழி நரேந்திரன் மற்றும் நகரமன்ற கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். மறைமலைநகர் நகராட்சியில்  நகரமன்ற தலைவர் ஜெ.சண்முகம் தலைமையில் நகராட்சி ஆணையர் லட்சுமி தேசிய கொடி ஏற்றிவைத்தார்.

Tags : Kanchi ,Republic Day ,Chengalpattu District ,Arthi ,Rahulnath , Kanchi, Republic Day in Chengalpattu District; Welfare assistance to 212 beneficiaries: Collectors Arthi, Rahulnath provided
× RELATED தியாகராஜர் கண்ட தெய்வீக தரிசனம்!