திருச்செந்தூர், செங்கோட்டை பாசஞ்சர் ரயில்களுக்கு கோவை எக்ஸ்பிரசோடு இணைப்பு வசதிகள் நெல்லையில் அமல்

நெல்லை: திருச்செந்தூர், செங்கோட்டை மார்க்க பயணிகள் நாகர்கோவில் - கோவை ரயிலை நெல்லையில் பிடிக்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை, குமரி மற்றும் தென்மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ், நெல்லையில் இருந்து காலை 8.55 மணிக்கு புறப்பட்டு கோவை செல்கிறது.

இதனால் திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டை பாசஞ்சர் ரயில்களில் ஏறி நெல்லை வரும் பயணிகள் இந்த ரயிலை பிடிக்க முடியாமல் திண்டாடினர். செங்கோட்டை - நெல்லை பயணிகள் ரயில் காலை 6.40 மணிக்கு, செங்கோட்டையில் புறப்பட்டு நெல்லைக்கு 8.50 மணிக்கு வந்து சேருகிறது. திருச்செந்தூர் - நெல்லை ரயில் காலை 7.10 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு நெல்லைக்கு 9 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரயில்களில் வரும் பயணிகள் நெல்லையில் 8.50 மணிக்கு புறப்படும் கோவை ரயிலை மயிரிழையில் தவற விடுகின்றனர்.

எனவே கோவை ரயிலை பிடிக்கும் வகையில் திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டை பாசஞ்சர் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதோடு, கோவை ரயிலையும் தாமதமாக இயக்கிட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர். கோட்ட ரயில்வே ஆலோசனை குழு கூட்டத்தில், இதுகுறித்து ஆலோசனைகுழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - செங்ேகாட்டை வழித்தடங்களில் ஏற்கனவே மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ரயில்களை வேகமாக இயக்கிட கேட்டுக் கொண்டனர்.

அதன்படி திருச்செந்தூரில் காலை 7.10 மணிக்கு புறப்படும் ரயில், நெல்லைக்கு காலை 9 மணிக்கு வருவதற்கு பதிலாக 10 நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்படி கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும் காலை 8.45 மணிக்கே தற்போது நெல்லை வந்து சேருகிறது. நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் நெல்லையில் 8.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 9.05 மணிக்கு புறப்படும் வகையில், அதன் நேரமும்  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர், செங்கோட்டை மார்க்கத்தில் இருந்து ரயில் பயணிகள், நெல்லை ரயில் நிலையத்தில் கோவை ரயிலை பிடித்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: