×

புகையிலைப் பொருட்களான பான்மசாலா, குட்காவுக்கான தடை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் கடந்த 2006ம் ஆண்டு, தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீடும் செய்யப்பட்டது.  இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், புகையிலை நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், மற்றொரு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:
 உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பர தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தையும் அந்த சட்டங்கள் வழங்கவில்லை.  

 உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிகாரத்திற்குள் சிகரெட், புகையிலை பொருட்கள் விநியோகம் வராது. அதே நேரத்தில் புகையிலை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக மாநில அரசு, அந்த பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் புகையிலை பொருட்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சட்டப்பூர்வமாக அமல்படுத்தி இருக்க வேண்டும்.

 நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தில் புகையிலை பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர அந்த பொருட்களை உட்கொள்ளவோ, நுகர்வதற்கோ அல்ல. புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின்கீழ் வராது என்று இந்த நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது. எனவே, உணவு பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பொது சுகாதாரம் ஆகியவற்றின் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க அதிகாரம் இல்லை.

எனவே, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு ஆணையரின் அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Panmasala ,Gutka ,Madras High Court , Madras High Court orders ban on tobacco products, Panmasala, Gutka
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...