×

கடந்த ஓராண்டில் பயணிகள் தவறவிட்ட ரூ.12 லட்சம் உடமைகள் மீட்பு ரூ.7.8 லட்சம் அபராதம் வசூல்: பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை

ஆலந்தூர்: கடந்த ஓராண்டில் பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை மூலம் பயணிகளின் ரூ.12 லட்சம் உடமைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ரூ.7.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து, கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் விஜயகுமார் கூறியதாவது:
கடந்த 2022 ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பாதுகாப்பு படை போலீசாரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 40க்கும் மேற்பட்ட பயணிகளால் தவறவிடப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்புள்ள உடமைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரயில் பயணத்தின்போது காயம் அடைந்த 30க்கும் மேற்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஆபத்தான நிலையில் இருந்த 5க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் காக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது தவறவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் தங்களின் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறி ரயில் நிலையத்தை சுற்றி இருந்த 12 குழந்தைகளை மீட்டெடுத்து அவர்கள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விடுதியில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மகன், மகளால் கைவிடப்பட்டு ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த முதியோர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து அவர்களை முதியோர் பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஐஆர்டிசி விதிகளுக்கு முரணாக முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபத்துக்கு விற்ற 5 பேர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட டிக்கெட்டுகளின் மதிப்பு 2 லட்சத்து 80 ஆயிரம். இதேபோல், ரயில் படிக்கட்டில் பயணம் செய்தவர்கள், பெண்கள் பெட்டியில் பயணம் செய்தவர்கள், ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடந்து செல்பவர்கள், ரயில் நிலையங்களில் சிறுநீர் கழித்தவர்கள், ரயில் பெட்டியில் புகை பிடித்தவர்கள் மற்றும் முறையான உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்தவர்கள் என 1106 பேரை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரயில்வே நீதிமன்றத்தின் மூலம் ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களிலும் ரயில்வே பாதுகாப்பு படை தொடர்ந்து செயல்பட்டு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Parangimalai Railway Security Force , Recovery of Rs 12 lakh belongings lost by passengers in last one year Rs 7.8 lakh fine collected: Parangimalai Railway Security Force action
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...