பழங்குடியினர் உன்னிக்குச்சி மூலம் தளவாடப்பொருள் தயாரிக்க ரூ.1.80 கோடி செலவிடப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

சென்னை: பழங்குடியினர் வருவாய் ஈட்டும் பொருட்டு உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிக்க ரூ.1.80 கோடி செலவிடப்படும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் உள்ள உன்னிக்குச்சி செடிகளின் பிரம்பினை பயன்படுத்தி செய்யப்படும் மேசை, நாற்காலி, சோபா உள்ளிட்ட பல்வேறு தளவாடங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இத்தகைய பொருட்களை செய்வதற்கு தகுந்த பயிற்சிகள் அளித்தல், உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் வாங்குதல் சந்தைப்படுத்துதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய பணிகளுக்கு ரூ.1.80 கோடி செலவிடப்படும். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், பழங்குடியின மக்கள் வருமானம் ஈட்டும் வகையிலும், தொடர்ச்சியான வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டும், உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிப்பதற்கு, ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.75,00,000, நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.60,90,000, ஆக மொத்தம் ரூ.1,35,90,000 விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுமார் 310 பழங்குடியின குடும்பங்கள் பயன்பெறுவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: