901 பேருக்கு வீரதீர செயல்களுக்கான போலீஸ் விருது: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டின் 74வது குடியரசு தினத்தையொட்டி 901 போலீசாருக்கு வீரதீர செயல்களுக்கான விருதை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஒன்றிய ஆயுதப்படை போலீஸ் மற்றும் மாநில போலீஸ் துறையில் வீரதீர செயல்கள் புரிந்த காவலர்களுக்கு குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி விருது வழங்குவது வழக்கமாகும். இந்தாண்டு வீரதீர செயல்களுக்கான போலீஸ் விருதுக்கு உள்துறை அமைச்சகம் 901 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக சிஆர்பிஎப்.ஐ சேர்ந்த 48 போலீசார், மகாராஷ்டிராவில் 31, ஜம்மு காஷ்மீரில் 25, ஜார்கண்ட்டில் 9, டெல்லி, சட்டீஸ்கர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையில் இருந்து தலா 7 பேருக்கு வீரதீர விருது வழங்கப்பட உள்ளது.

இந்தாண்டு போலீசாருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கப்படவில்லை. அதே நேரம் சிறந்த பணியாற்றியதற்கான ஜனாதிபதியின் போலீஸ் விருது 93 போலீசாருக்கும், 668 பேருக்கு தகுதியான சேவையாற்றிய ஜனாதிபதியின் போலீஸ் விருதும் வழங்கப்படுகிறது. அதே போல், சிபிஐ.யில் குழந்தை பாலியல் வழக்கு, மகந்த் நரேந்திர கிரி கொலை வழக்கு, லாலு பிரசாத் வழக்கு போன்ற வழக்குகளை விசாரித்த 30 சிபிஐ அதிகாரிகள் போலீஸ் விருது வழங்கப்படுகிறது. இதே போல் வீர தீர செயல்களுக்கான விருது ராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: