புதுடெல்லி: மித்ரா நினைவுச்சின்ன திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 1,000 நினைவுச்சின்னங்களை புதுப்பிக்க ஒன்றிய கலாசார துறை திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசின் சுற்றுலா தறையின் கீழ் மித்ரா நினைவுச்சின்ன திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது சுற்றுலா துறையிடம் இருந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலாசாரா துறைக்கு மாற்றப்பட்டது. தற்போது திருத்தி அமைக்கப்பட்ட மித்ரா நினைவுச்சின்ன திட்டம் அதன் புதிய இணையதள முகவரியில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கலாசார துறை செயலாளர் கோவிந்த் மோகன், ``திருத்தி அமைக்கப்பட்ட மித்ரா நினைவுச்சின்ன திட்டம் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் கீழ், விடுதலை அமிர்த பெருவிழா முடிவடையும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 500 நினைவுச்சின்னங்கள் புதுப்பிக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 1,000 நினைவுச்சின்னங்கள் சீரமைக்கப்பட்டு அங்கு ஒலி-ஒளி காட்சி நடத்த ஒன்றிய கலாசார துறை திட்டமிட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.