×

டிஜிட்டல் பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி வலுவாக்கும்: ரிசர்வ் வங்கி நம்பிக்கை

சண்டிகர்: ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி மேலும் வலுவாக்கும்’ என ரிசர்வ் வங்கி செயல் இயக்குநர் அஜய் குமார் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு மொத்த மற்றும் சில்லறை பங்கு வர்த்தகத்தில் உள்நாட்டின் சிபிடிசி எனும் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இது தற்போது சோதனை அடிப்படையில் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ரிசர்வ் வங்கி சார்பில் நேற்று நடத்தப்பட்ட டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்தரங்களில் ரிசர்வ் வங்கி செயல் இயக்குநர் அஜய் குமார் சவுத்ரி பங்கேற்று பேசியதாவது: தற்போது ரூபாய் நோட்டுகளாக உள்ள இந்திய கரன்சிக்கு நிகரான அனைத்து அம்சங்களையும் டிஜிட்டல் கரன்சி கொண்டுள்ளது. இதன் மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பை ஒத்திருக்கிறது. டிஜிட்டல் கரன்சி பணம் செலுத்தும் நடைமுறையை மேலும் மேம்படுத்தும்.

பண நிர்வாகத்தில் உள்ள செலவைக் குறைக்கும். எளிதாக அணுகக் கூடிய, பாதுகாப்பான டிஜிட்டல் கரன்சிகள், டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும். டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இம்மாத இறுதிக்கும் 50,000ஐ எட்டும் என எதிர்பார்க்கிறோம். அடுத்ததாக, டிஜிட்டல் கரன்சியின் ஆப்லைன் பயன்பாடு குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். தற்போது உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் 95 சதவீத பங்களிப்பை கொண்ட 115 நாடுகள் டிஜிட்டல் கரன்சி பற்றி ஆய்வு செய்து வருகின்றன. இதில் 60 நாடுகள் ஆய்வில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளன. ஜி20 அமைப்பில் 18 நாடுகள் டிஜிட்டல் கரன்சி குறித்து ஆய்வு செய்யும் நிலையில், இந்தியா உள்ளிட்ட 7 நாடுகள் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : RBI , Digital currency will power digital economy: RBI believes
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...