பட்ஜெட்டுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை: நிதியமைச்சக வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: பொது பட்ஜெட்டுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகை திட்டங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பிப். 1ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தாண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஒன்றிய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகைகள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் வகையிலும், 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவதற்கான அறிவிப்புகளும் வெளியாகும். இதன் மூலம் சிறிய பதவிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்; இருப்பினும், எட்டாவது ஊதியக் குழுவை அமலுக்கு கொண்டுவர ஓராண்டாகலாம்.

மேலும் அரசு ஊழியர்கள் வீடுகளை கட்டவும் அல்லது பழுதுபார்க்கவும் வீட்டுக் கட்டிட கொடுப்பனவை (எச்.பி.ஏ) வழங்கப்படுகிறது. முன்பணமாக வழங்கப்படும் இந்த தொகைக்கு 7.1 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனை 7.5 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளது. அதேநேரம் முன்பணத்தை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: