×

என்.எல்.சிக்காக விளைநிலங்கள் மிரட்டி பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்

சென்னை: என்.எல்.சிக்காக விளைநிலங்கள் மிரட்டிபறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அன்புமணி எழுதியுள்ள கடிதம்: கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் என்.எல்.சி. நிறுவனம், அதன் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருப்பதையும், வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், பொதுமக்களும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவதையும் முதலமைச்சராகிய தாங்கள் நன்கு அறிவீர்கள்.

என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப் படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக் கூடியவை. அதனால், அந்த நிலங்களை விட்டுத் தர உழவர்கள் விரும்பவில்லை. என்.எல்.சி. தரப்பிலும், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலும் இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கூட, அவை எதுவும் வெற்றிபெறவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சராக தாங்கள் பதவியேற்ற பின்னர், வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு எந்த நன்மையும் கிடையாது; தீமைகள் தான் அதிகம். என்.எல்.சிக்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கொடுத்த சுமார் 25,000  குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டது. அவர்களில் எவரும் இப்போது பணியில் இல்லை. அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை.நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெளியேறும் சல்பர் டைஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுவாயுக்கள்,  நிலக்கரி துகள் ஆகியவை காற்றில் பரவுவதால் காற்று மாசடைந்து ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் நோய் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இப்படியாக, கடலூர் மாவட்டத்திற்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் எந்த வகையிலும் பயன்படாத,  கடலூர் மாவட்டத்திற்கு பெருந்தீமைகளை மட்டுமே கொடுக்கும் என்.எல்.சி நிறுவனத்திற்காக உழவர்களின் நிலங்களை பறிக்கக்கூடாது; என்.எல்.சியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட உழவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும். அவர்களின் எதிர்பார்ப்பை தாங்கள் நிறைவேற்ற வேண்டும். என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : NLC ,Anbumani ,Chief Minister ,M.K.Stalin. , Anbumani's letter to Chief Minister M.K.Stalin should stop expropriation of agricultural land for NLC
× RELATED என்எல்சி சுரங்கத்தின் மண்ணுடன்...