சென்னை: ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய - கருமான்குளம், கங்கைகரைபுரம் பத்ரிகரை, அப்பாசாமி முதலி தெரு திட்டப்பகுதியில் உள்ள 408 குடியிருப்புதாரர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணை மற்றும் கருணைத் தொகையாக ரூ.97.92 லட்சம் காசோலைகள் வழங்கினார்
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அப்பாசாமி முதலி தெரு திட்டப்பகுதியில் 64 குடியிருப்புதாரர்களுக்கும் , தெற்கு மாட வீதி (கருமான்குளம்) திட்டப்பகுதியில் 24 குடியிருப்புதாரர்களுக்கும், கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில் 176 குடியிருப்புதாரர்களுக்கும் மற்றும் பத்ரிகரை திட்டப்பகுதியில் 144 குடியிருப்புதாரர்களுக்கும் மொத்தம் 408 குடியிருப்புதாரர்களுக்கு ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளையும் , மற்றும் கருணைத் தொகையாக தலா ரூ.24,000 வீதம் ரூ.97.92 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளை 24.1.2023 அன்று வழங்கினார்.
ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் பின்னர் தெரிவிக்கையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கீரிட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை அப்பாசாமி முதலி தெரு திட்டப்பகுதியில் 1973 ஆம் ஆண்டு 64 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைதளம் + 3 மற்றும் 3 மாடி கட்டிடங்கள் 263.62 ச.அடி பரப்பளவில் இருந்தது. தற்பொழுது இதனை இடித்து விட்டு 420 ச.அடி பரப்பளவில் ரூ.10.49 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.
பத்ரிகரை திட்டப்பகுதியில் 1981ஆம் ஆண்டு 144 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைதளம் +3 மற்றும் 3 மாடி கட்டிடங்கள் 232 ச.அடி பரப்பளவில் இருந்தது. தற்பொழுது இதனை இடித்து விட்டு 410 ச.அடி பரப்பளவில் ரூ.26.98 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. தெற்கு மாட வீதி (கருமான்குளம்) திட்டப்பகுதியில் 1980 ஆம் ஆண்டு 24 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைதளம் +3 மற்றும் 3 மாடி கட்டிடங்கள் 236 ச.அடி பரப்பளவில் இருந்தது.
தற்பொழுது இதனை இடித்து விட்டு 309.35 ச.அடி பரப்பளவில் ரூ. 3.60கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில் 1983 ஆம் ஆண்டு 176 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைதளம் + 3 மற்றும் 3 மாடி கட்டிடங்கள் 232 ச.அடி பரப்பளவில் இருந்தது. தற்பொழுது இதனை இடித்து விட்டு 410 ச.அடி பரப்பளவில் ரூ.30.58 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.
இக்குடியிருப்புதாரர்களுக்கு மறுகட்டுமான காலங்களில் வெளியே வாடகையில் தங்குவதற்காக கடந்த கால ஆட்சியில் ரூ.8000 வழங்கப்பட்டு வந்த கருணைத் தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் உயர்த்தி ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் 408 குடியிருப்புதாரர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகள், கருணைத் தொகையாக தலா ரூ.24,000 வீதம் ரூ.97.92 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பணிகள் குழு தலைவர் சென்னை மாநகராட்சி நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் பிரேமா சுரேஷ் , வாரிய நிர்வாகப் பொறியாளர் .கீதா, வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.