ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகாவே போட்டியா?.. எடப்பாடி பழனிசாமி முடிவால் பரபரப்பு

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறங்குகிறார். அதிமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்ட தமாகா விலகி கொள்ள அதிமுகவே போட்டியிடும் என ஜி.கே.வாசன் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இரு அணியினரும் வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்துள்ளனர். கூட்டணி கட்சி நிர்வாகிகளை இருதரப்பினர் போட்டி போட்டு சந்தித்து ஆதரவை திரட்டினர். ஆனால் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பாஜ வேட்பாளரை நிறுத்தினால், ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் அறிவித்த நிலையில், பாஜ இங்கு களம் இறங்க விரும்பவில்லை. அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறப்படும் நிலையில், யாரும் ஆர்வம் காட்டவில்லை. மேலும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என இருதரப்பினரும் வேட்பாளரை நிறுத்தினால் பாஜ ஆதரவு யாருக்கு என்ற  எதிர்பார்ப்பும் உள்ளது. பாஜ யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்த கட்சிக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக ஏ.சி.சண்முகம் கூறி விட்டார். இதனால் இரு அணிகளிலும் வேட்பாளரை அறிவிப்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஓமலூரில் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் 18 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 2 மணிநேரம் நடந்த இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது, வேட் பாளராக யாரை நிறுத்துவது என ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டம் முடிந்து யாரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. வழக்கமாக பேட்டி கொடுக்கும் ஜெயக்குமாரும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டார். எடப்பாடி பழனிசாமியும் நிருபர்களை பார்த்து கும்பிட்டு விட்டு சென்றுவிட்டார்.

அதிமுக தொடர்பாக வழக்கு விசாரணை முடிந்து சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. விரைவில் தீர்ப்பு கிடைக்கும் என எடப்பாடி தரப்பினர் எதிர்பார்த்து உள்ளனர். தீர்ப்பு சாதகமாக வந்தால் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தப்படுவார். இல்லையெனில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் கே.வி.ராமலிங்கம் தோல்வி பயத்தில் போட்டியிட விரும்பவில்லை என தெரிகிறது. இதனால் புதிதாக ஒருவரை நிறுத்தி தனது செல்வாக்கை காட்ட எடப்பாடி விரும்புவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், இடைத்தேர்தலில் போட்டியிட கே.வி.ராமலிங்கம் விரும்பவில்லை. இதனால் புதுமுகம் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஓபிஎஸ்சும் வேட்பாளரை நிறுத்தினால் பாஜ ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழும். ஓபிஎஸ், பாஜ வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவு அளிப்பதாக கூறி மிகவும் நெருக்கத்தை காட்டி வருகிறார். இதேபோல் நாங்கள் அறிவிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் தீர்ப்பையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த தேர்தலில் வெற்றி தோல்வியால் எதுவும் நிகழப்போவதில்லை. எனவே குழப்பங்களை தவிர்க்க தமாகாவையே போட்டியிட வைக்கலாமா என்ற ஆலோசனையும் உள்ளது.

அவ்வாறு தமாகா நிறுத்தப் பட்டால் அனைத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும். எனவே அதிமுக வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தமாகாவை போட்டியிட வைப்பதா என ஓரிருநாளில் முடிவு அறிவிக்கப்படும், என்றனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி இன்று 2வது நாளாக ஓமலூர் கட்சி அலுவலகம் வந்தார். அவரது முன்னிலையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். இடைத்தேர்தலில் போட்டி தொடர்பாக குழப்பம் நீடிக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலேயே முகாமிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: