ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் முகமது சிராஜ்

துபாய்: ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளி 729 புள்ளிகளுடன் முகமது சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறினார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கடந்த ஒருவருட காலமாக ஒருநாள் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு காயம் ஏற்பட்டு அணியில் இடம்பெற முடியாத நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து பலரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியில் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் இடம் பிடித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி கொண்ட முகமது சிராஜ், இந்திய அணிக்கு பந்துவீச்சில் மிகவும் பக்கபலமாக செயல்பட்டு வருகிறார்.

வேகம், ஸ்விங் மற்றும் பவர்பிளேவில் விக்கெட்கள் என சிறப்பாக விளையாடி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். 28 வயதான முகமது சிராஜ் 20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ட்ரென்ட் போல்ட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளி 729 புள்ளிகளுடன் முகமது சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறினார். ஜோஷ் ஹேசில்வுட் 727 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 708 புள்ளிகளுடன் ட்ரென்ட் போல்ட் 3வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories: