×

தென்கிழக்கு வங்கக்கடலில் ஜன.27ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.26, 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் 28. 29 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25-ம் தேதி முதல் 27.வரை பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28-ம் தேதி  தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் 29-ம் தேதி இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Tags : Southeast Bay of Bengal ,Chennai ,Meteorological Department Information , A low pressure area will form over Southeast Bay of Bengal on Jan 27: Chennai Meteorological Department Information
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...