×

மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மீது கதிர்வீச்சு தாக்கமா? அணுமின் நிலைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வு

சென்னை: மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதியில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளதா என கதிர்வீச்சு கருவிகளுடன் அணுமின் நிலைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர். ஜி20 மாநாட்டின் உச்சி மாநாடு வரும் 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. மேலும், இந்தியா முழுவதும் மும்பை, உதய்பூர், பெங்களூரு, கொல்கத்தா, காந்தி நகர், புனே, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடக்கிறது.

மாநாட்டில், இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, தென் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில், கலந்துகொள்ள வரும் பிரதிநிதிகள் பிப்ரவரி 1ம் தேதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் கைவண்ணத்தில் செதுக்கிய கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்கின்றனர்.

மேலும், மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையொட்டி தொல்லியல் துறை சார் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அருகாமையில் மாமல்லபுரம் உள்ளது.  இதனால், ஜி20 மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் உடல் நலம், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாமல்லபுரத்தில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதா என்பதை கதிர்வீச்சு கருவி மூலம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நேற்று கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலைய அதிகாரி ராமசுப்பிரமணியன், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டர் கவுஷல் குமார் பரேவா ஆகியோர் கொண்ட குழுவினர் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைகல் பாறை உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் காற்றின் மூலம் சிற்பங்கள், புல்வெளி தரைகள் ஆகியவற்றில் கதிர்வீச்சு பரவி உள்ளதா என கதிர்வீச்சு பரவலை துல்லியமாக கண்டுபிடிக்கும் ரேடர் கருவி மூலம் ஆய்வு செய்தனர். அப்போது, அக்குழுவினர் கூறுகையில், 0.05 சதவீத கதிர்வீச்சு மட்டுமே உள்ளது. இது, சாதாரண அளவுதான். இதனால், எந்த பாதிப்பு இல்லை எனக் கூறினர்.

Tags : Mamallapuram ,Nuclear Power Plant ,National Disaster Response Force Survey , Radiation impact on ancient symbols of Mamallapuram? Nuclear Power Plant Officials, National Disaster Response Force Survey
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...