×

இந்தி மொழியை வளர்க்க வழங்கிய ரூ.5.78 கோடி முறைகேடு தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார சபா முன்னாள் தலைவர் கைது: மதுரையில் நடந்த விசாரணையை தொடர்ந்து நடவடிக்கை

சென்னை: ஒன்றிய அரசு, இந்தியை வளர்க்க வழங்கிய நிதியில் ரூ.5.78 கோடி முறைகேடு செய்ததாக சோதனையில் கிடைத்த ஆவணங்கள் படி தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார சபா முன்னாள் செயல் தலைவர்சிவயோகி நிரல்கோட்டியை கைது செய்யப்பட்டார். சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார சபா அமைந்துள்ளது.இந்த கல்வி அமைப்பின் மூலம் இந்தி மொழியை வளர்க்க தேர்வுகள் நடத்தி டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கவும், இந்தி கற்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டது. இந்த அமைப்பின் மண்டல அலுவலகங்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத், கர்நாடகா மாநிலம் தார்வாட், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மற்றும் திருச்சி யில் உள்ளது.

அதுமட்டுமல்லாது கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, கோயம்புத்தூர், சேலம் உட்பட 14 கிளைகளும் கொண்டுள்ளது. தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார சபா மூலம் இந்தியை வளர்க்க ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் பல கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து முறைகேடு தொடர்பாக ஒன்றிய கல்வித்துறை லஞ்ச ஒழிப்புத்துறை இணை செயலாளர் நீதா பிரசாத் சிபிஐயில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி மதுரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில், தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார சபாவுக்கு கடந்த 2004-05ம் ஆண்டு மற்றும் 2016-17ம் நிதியாண்டில் இடைப்பட்ட காலத்தில் ஒன்றிய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் அளிக்கப்பட்ட நிதியை இந்தி வளர்ப்பதற்கு பயன்படுத்தாமல், ஆயுர்வேதா, ஹோமியோபதி, சட்டக்கல்லூரி மற்றும் ஆங்கில வழிகள் கல்விகளுக்கு முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட காலக்கட்டத்தில் மறைந்த தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார சபா தலைவராக நிரல் கோட்டி மற்றும் 2014ம் ஆண்டில் இருந்து சபாவின் செயல் தலைவராக அவரது மகன் சிவயோகி நிரல்கோட்டி பதவியில் இருந்துள்ளனர்.

ஒன்றிய அரசு அளித்த நிதியில் தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார சபாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் மண்டலத்தில் முறைகேடுகள் நடந்ததும் தெரியவந்தது. குறிப்பாக, கடந்த 2011-12ம் ஆண்டு முதல் 2016-17ம் ஆண்டுகளில் 600 இந்தி இலவச வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், 600 ஆசிரியர்களுக்கு பயணப்படிகள் மற்றும் மொழிப்பெயர்ப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளனர். இதுதவிர, தக்‌ஷிண பாரத் இந்தி பிரச்சார சபா 2004-05 முதல் 2016-17 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.10,68,89,626 வரவு செலவு கணக்கு காட்டி உள்ளது. அதில் தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார சபாவின் பங்கு மட்டும் 1 கோடியே 85லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வரவு செலவு கணக்கில் போலியான ஆவணங்களை தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த காலக்கட்டத்தில் 400 முதல் 450 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்திருப்பதும், அதிலும் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் ஒன்றிய அரசு அளித்த மொத்த நிதியில் 5 கோடியே 78லட்சத்து 91 ஆயிரத்து 179 ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து மதுரை சிபிஐ அதிகாரிகள் அளித்த அறிக்கையின் படி, பெங்களூரில் உள்ள சிபிஐ அதிகாரிகள் தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார சபாவின் முன்னாள் செயல் தலைவராக பணியில் இருந்த கர்நாடகா மாநிலத்தில் வசித்து வரும் சிவயோகி நிரல்கோட்டி யை பெங்களூரு சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர்.

* ஆயுர்வேதா, ஹோமியோபதி, சட்டக்கல்லூரி மற்றும் ஆங்கில வழிகள் கல்விகளுக்கு முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.

Tags : Dakshina Bharat Hindi Prasara Sabha ,Madurai , Ex-president of Dakshina Bharat Hindi Prasara Sabha arrested in Rs 5.78 crore embezzlement given to promote Hindi language: Action follows investigation in Madurai
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...