உள்நாட்டின் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் ஆன்ட்ராய்டுக்கு போட்டியாக பார் ஓஎஸ்: சென்னை ஐஐடி உருவாக்கியது

புதுடெல்லி: சென்னை ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட உள்நாட்டின் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான பார் ஓஎஸ்-ஐ ஒன்றிய அமைச்சர்கள் நேற்று சோதித்து பார்த்தனர். மொபைல் போன் செயல்பட இயங்குதளம் (ஆபரேட்டிங் சிஸ்டம்) அவசியமாகும். தற்போது பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமும், ஆப்பிள் ஐபோன்களில் ஐஓஎஸ் இயங்குதளமும் உள்ளன. இவை இரண்டுமே வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவை. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் கூகுளின் பிளே ஸ்டோர் மூலமாக ஆப்களை தரவிறக்கம் செய்து மொபைலில் பயன்படுத்த முடியும்.

இந்நிலையில், சென்னை ஐஐடியும், ஜண்ட்கே ஆபரேஷன்ஸ் எனும் தனியார் நிறுவனமும் இணைந்து ‘பார் ஓஎஸ்’ எனும் உள்நாட்டின் புதிய மொபைல் இயங்குதளத்தை உருவாக்கி உள்ளன.

இந்த இயங்குதளமும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பெரும்பாலும் ஒத்திருக்கிறது. ஆனாலும், பயனர்களுக்கு அதிக சுதந்திரம், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் பார் ஓஎஸ் கவனம் செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது பயனர்களின் ரகசிய தகவல்கள் கசியாமல் பார் ஓஎஸ் பார்த்துக் கொள்ளும் என்கின்றனர் அதன் தயாரிப்பாளர்கள். இந்த இயங்குதளத்தில் எந்த ஒரு ஆப்பும் முன்கூட்டியே நிறுவப்பட்டிருக்காது.

பயனர்களுக்கு தேவையான ஆப்களை மட்டும் நிறுவிக் கொள்ள முடியும். இதற்காக, பிரைவேட் ஆப் ஸ்டோர் சர்வீஸ் (PASS) அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த ஆப்களுக்கு எந்தெந்த அணுகலை தருவது என்பதை நீங்களே முடிவு செய்யலாம். இதன் மூலம் உங்கள் தனியுரிமை தகவல்கள் மூன்றாம் நபர் நிறுவனங்களுக்கு கசியாமல் தடுக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும், ஆன்ட்ராய்டு போலவே பார் ஓஎஸ்சிலும் ஆப்கள் தாமாகவே அப்டேட் ஆகும். இந்தியாவில் உள்ள 100 கோடி ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு பார் ஓஎஸ் சிறந்த இயங்குதளமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயங்குதளத்தை டெல்லியில் நேற்று ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அஷ்விணி வைஷ்ணவ் ஆகியோர் சோதனை செய்து பார்த்தனர். பின்னர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ‘‘நாட்டின் ஏழை எளிய மக்களே இந்த வலுவான, உள்நாட்டின் நம்பகமான மற்றும் தற்சார்பு டிஜிட்டல் உள்கட்டமைப்பின் முக்கிய பயனாளர்களாக இருப்பார்கள். தகவல் தனியுரிமையை நோக்கிய வெற்றிகரமான அடுத்த கட்ட முன்னேற்றமே பார் ஓஎஸ்’’ என்றார்.

* டவுன்லோடு செய்வது எப்படி?

பார் ஓஎஸ் இயங்குதளத்தை எப்படி டவுன்லோடு செய்து பயன்படுத்துவது என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. தற்போதைக்கு இந்த இயங்குதளம், நிறுவனங்களால் வெளியிடப்படும் புதிய மொபைல் போன்களில் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான தனியுரிமை, பாதுகாப்பு தேவைகளைக் கொண்ட மற்றும் ரகசிய தகவல்தொடர்புகள் தேவைப்படும் முக்கியமான தகவல்களைக் கையாளும் அரசு நிறுவனங்களுக்கு பார் ஓஎஸ் சேவைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: