×

இயக்குனரும், நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் மரணம்

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனரும், வசன கர்த்தாவும், குணச்சித்திர நடிகருமான ஈ.ராமதாஸ் (66), மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். விழுப்புரத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் எத்திராஜுலு பிள்ளை, பூங்காவனம் தம்பதியின் மகனான ஈ.ராமதாஸ், இயக்குனர் மனோபாலாவுடன் அறிமுகம் ஏற்பட்டு, இயக்குனர் மணிவண்ணனிடம் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். 1986ல் மோகன், சீதா நடித்த ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜாதான்’, ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’, மன்சூர் அலிகான் நடித்த ‘இராவணன்’, ‘வாழ்க ஜனநாயகம்’, கின்னஸ் சாதனைக்காக 23 மணி, 58 நிமிடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட ‘சுயம்வரம்’ படத்தின் 14 இயக்குனர்களில் ஒருவராகப் பணியாற்றிய ஈ.ராமதாஸ், 1980ல் ‘கரடி’ படத்தில் பாடல் எழுதினார். பிறகு ‘பொன் விலங்கு’, ‘எல்லைச்சாமி’, ‘ராஜமுத்திரை’, ‘மக்கள் ஆட்சி’, ‘அந்தப்புரம்’, ‘எதிரும் புதிரும்’, ‘சங்கமம்’, ‘கண்ட நாள் முதல்’ உள்பட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.

2004ல் கமல்ஹாசன் நடித்த ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் மருத்துவமனை வார்டு பாயாக நடித்த அவர், தொடர்ந்து ‘யுத்தம் செய்’, ‘காக்கி சட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘தர்மதுரை’, ‘அறம்’, ‘ஆண் தேவதை’, ‘கோலிசோடா’, ‘மாரி 2’ உள்பட பல படங்களில் நடித்தார். ‘விசாரணை’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.  இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈ.ராமதாஸ், திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.

இதையடுத்து கே.கே.நகரிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை ஈ.ராமதாஸின் இறுதிச்சடங்கு நெசப்பாக்கம் மயானத்தில் நடந்தது. ஈ.ராமதாசுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

Tags : E. Ramadoss , Director and actor E. Ramadoss dies of heart attack
× RELATED சென்னையில் 14ம் தேதி குடும்ப அட்டை குறைதீர் முகாம்