அம்மா சிமென்ட் வினியோக முறைகேடு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: அரசு தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அம்மா சிமென்ட் வினியோகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையை, தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமென்ட் வினியோக திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிடக் கோரி கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் யோகேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அம்மா சிமென்ட் கிட்டங்கியில் உள்ள ஆவணங்களின்படி 4,217 சிமென்ட் மூட்டைகள் வினியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது. முறைகேடு தொடர்பாக, அம்மா சிமென்ட் கிட்டங்கியை நிர்வகிக்கும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எதிராக மட்டும் குந்தடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதியப்படவில்லை. எனவே, இந்த முறைகேடு வழக்கை விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், குந்தடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழக்கில் சேர்க்கப்படுவர் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அம்மா சிமென்ட் வினியோகத் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து, மூன்று வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: