சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் தாரேஸ் அஹமது நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி (நாளை) கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம ஊராட்சிகளில் தலைமை பொறுப்பு வகிக்கும் அனைத்து ஊராட்சி தலைவர்கள், முறையே அவர்களது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடியினை ஏற்றி வைப்பார்கள். மேலும் கிராம சபை கூட்ட நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்திடும் வகையில் ‘நம்ம கிராம சபை’ என்கிற கணிணி,தொலைபேசி மென்பொருள் மூலம் கிராம சபை நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று நடைபெறும் உங்கள் ஊர் கிராமசபை கூட்டங்களில்மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.