×

இடஒதுக்கீடு குறித்து பேசியதால் அமைச்சரின் ஜாதி பெயரை கூறி கொலை மிரட்டல்: பீகார் போலீஸ் விசாரணை

பாட்னா: இடஒதுக்கீடு குறித்து பேசியதால் பீகார் அமைச்சரின் பெயரை குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான, பீகார் வருவாய் மற்றும் நில சீர்திருத்தத்துறை அமைச்சர் அலோக் மேத்தா, கடந்த சில நாட்களுக்கு முன் பாகல்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில்  பேசுகையில், ‘பத்து சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைபவர்கள் ஆங்கிலேயர்களின் தரகர்கள்; அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம்  உள்ளது.

ஆனால் கடுமையாக உழைத்து வாழ்பவர்கள் இன்று வரை நிலமற்ற ஏழைகளாகவே  உள்ளனர்’ என்று பேசினார். இவரது பேச்சு குறிப்பிட்ட சமூக மக்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் அலோக் மேத்தாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தலைமைச் செயலக காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதில், ‘எனது இரண்டு வெவ்வேறு தொலைபேசி எண்களுக்கு, தீபக் பாண்டே, பப்பு திரிபாதி என்பவர்களின் பெயரில் அழைப்பு வந்தது.

எதிர்முனையில் பேசியவர்கள், எனது ஜாதியை குறிப்பிட்டு ஆபாசமாக திட்டினர். கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Minister ,Bihar , Minister's caste name threatened to kill him for talking about reservation: Bihar police probe
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!