சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டு மைதானம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், தியாகராயநகர், நடேசன் பூங்கா எதிரில் உள்ள கண்ணதாசன் மைதானம் ஆகியவற்றில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-23யை நடத்தவும், மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி உட்பட ரூ.47.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களிடம் இருந்து முன்பதிவுகள் வரப்பெற்றுள்ளன. விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இந்த முன்பதிவானது 29.01.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.