×

ஐசிசி டி20 அணி அறிவிப்பு: கோஹ்லி, சூர்யா, ஹர்திக்பாண்டியாவுக்கு இடம்; இங்கி., பாக். வீரர்கள் தலா 2 பேருக்கு வாய்ப்பு

துபாய்: ஐசிசி உருவாக்கியுள்ள 2022ம் ஆண்டுக்கான கிரிக்கெட் அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்கும். அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான டி20 அணியை அறிவித்துள்ளது. ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என கடந்த 2022ம் ஆண்டு முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டிகளால் நிறைந்திருந்தன. எனவே அதன் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஐசிசி-ன் இந்த ப்ளேயிங் 11ல் இந்தியாவில் இருந்து 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் டாப் ஆர்டரில் நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோஹ்லி மீண்டும் இடம்பிடித்துள்ளார். மிடில் ஆர்டரில் உலகின் நம்பர் 1 வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு பின்னர் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு தந்துள்ளனர். 3 வருடங்களாக ஃபார்ம் அவுட்டால் தவித்து வந்த விராட் கோஹ்லி ஆசிய கோப்பை தொடரில் முதல்முறையாக டி20 போட்டியில் சதம் அடித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

அந்த தொடரில் 276 ரன்களை அடித்து 2வது அதிகபட்ச ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களை (296 ரன்கள்) குவித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். இதேபோல் சூர்யகுமார் யாதவை பொறுத்தவரையில் 2022ல் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அதுவும் குறைந்த பந்துகளில் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 1164 ரன்களை விளாசினார். இதே போல ஹர்திக் பாண்டியா 607 ரன்களை அடித்தும், 20 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐசிசி டி20 அணிக்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானில் இருந்து தலா 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, அயர்லாந்து அணிகளில் இருந்து தலா ஒரு வீரர் தேர்வாகியுள்ளார். இந்தியாவில் இருந்துதான் அதிகபட்சமாக 3 பேர் வாய்ப்பு பெற்றுள்ளனர். ஜாஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி தேர்வு செய்துள்ள டி20 அணி விவரம்: ஜாஸ் பட்லர், முகமது ரிஸ்வான், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், க்ளென் பிலிப்ஸ், சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, சாம் கரன், ஹசரங்கா, ஹாரிஸ் ராஃப், ஜோஸ் லிட்டில்

Tags : ICC ,T20 ,Kohli ,Suriya ,Hardik Pandya , ICC T20 squad announcement: Kohli, Suriya, Hardik Pandya spot; Eng., Pak. 2 players each
× RELATED மகளிர் டி20 உலக கோப்பை ஒளிரும் புர்ஜ் கலீபா!