×

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மலை போல் குவிந்துள்ள நாணயங்கள்: எண்ண முடியாமல் திணறும் ஊழியர்கள்.!

திருவனந்தபுரம்: சபரிமலையில் சமீபத்திய மண்டல, மகரவிளக்கு சீசனில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனர். தினமும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பக்தர்களும், மகரவிளக்கு காலத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் சபரிமலைக்கு வந்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கோயில் வருமானமும் அதிகரித்தது. இதுவரை வருமானம் ₹330 கோடியை தாண்டி உள்ளது. சபரிமலை கோயில் வரலாற்றில் இது மிக அதிக வருமானம் ஆகும்.

ஆனால் இதுவரை நாணயங்கள் எண்ணி முடிக்கப்படவில்லை. சபரிமலையில் உள்ள அன்னதான மண்டபத்தில் நாணயங்கள் மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எண்ணுவதற்காக கடந்த நவம்பர் 14ம் தேதி முதல் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஆனால் நாளுக்கு நாள் உண்டியலில் நாணயங்கள் குவிந்ததை தொடர்ந்து அவை முழுவதையும் எண்ண முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக மகர விளக்கு பூஜை முடிந்து நடை சாத்தப்படும் நாளிலேயே நாணயங்கள் எண்ணி முடிக்கப்பட்டு விடும்.

இந்த முறை நாணயங்கள் பெருமளவு குவிந்ததால் அவற்றை நடை சாத்துவதற்குள் எண்ணி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நாணயங்களை எண்ணுவதற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 700 ஊழியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஈடுபட்டுள்ளனர். 1, 2, 5, 10 என்று நாணயங்களை பிரித்து எண்ணப்பட்டு வருகிறது. மலை போல் குவிந்து கிடக்கும் நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு குறைந்தது 2 மாதங்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. இனியும் எண்ண வேண்டிய நாணயங்களின் மதிப்பு ₹20 கோடிக்கு மேல் வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Tags : Sabarimala Ayyappan temple , Coins piled up like a mountain in the Sabarimala Ayyappan temple: The staff are unable to count.!
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு