×

ராசிபுரம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 15 பெண்கள் படுகாயம்-ராஜேஷ்குமார் எம்பி., நேரில் ஆறுதல்

ராசிபுரம் : ராசிபுரம் அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், அதில் பயணம் செய்த சிறுமி உள்பட 15 பேர், படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்த ராஜேஷ்குமார் எம்பி., கலெக்டர் அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலா குட்டைக்காடு பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள், வெங்காயம் அறுக்கும் பணிக்காக, தண்ணீர்பந்தல்காடு பகுதிக்கு சரக்கு ஆட்டோவில் சென்றனர். அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பாலச்சந்தர்(37) என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். நாமகிரிப்பேட்டை அடுத்த கோரையாறு பகுதியில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ, தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்தவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மற்றும் அவ்வழியாக சென்றவர்கள் ஓடி வந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் சுமதி, பழனியம்மாள், மல்லிகா, ஜீவா மற்றும் 14 வயது சிறுமி உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., உடனடியாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார். இதில், படுகாயமடைந்த பிரியா, நாகலட்சுமி, லாவண்யா, ஐதாரதேவி, அமுதா, அம்பிகா, வினித்ரா மற்றும் அனுசியா ஆகிய 8 பேரை, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவரிடம் பரிந்துரைத்தார். இதையடுத்து  உடனடியாக அவர்கள்  சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, நகர செயலாளர் சங்கர், டிஎஸ்பி தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர் சுகவனம் மருத்துவமனைக்கு வந்து ஆறுதல் கூறினர்.

சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசிய ராஜேஷ்குமார் எம்பி.,

விபத்து நடந்தது குறித்த தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த ராஜேஷ்குமார் எம்பி., விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும், ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் ஆலோசனை வழங்கியதோடு, தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான நம்மை காக்கும் 48 மணிநேர சிகிச்சையில், அனைவருக்கும் சிகிச்சை அளிக்க, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செல்போனில் பேசினார். மேலும், மருத்துவத்துறை உயர் அதிகாரிகளிடமும் பேசி, அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க உதவி புரிந்தார்.

தீவிர சிகிச்சை பெறுபவர்களின் குடுத்தினருக்கு அமைச்சர் உதவி

விபத்தில் படுகாயமடைந்த 8 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர், அவர் கூறுகையில், ‘சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக 2 பேருக்கு மூளையில் ரத்த கசிவு இருப்பதால், அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் நிதியுதவி  அளிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அதன் முடிவில் இழப்பீடு பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். அப்போது அரசு மருத்துவனை டீன் மணி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

விதிகளை மீறி பயணம்

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் விவசாய வேலை மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி, சரக்கு ஆட்டோவில் பயணிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்க, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவையை கிராமப்புற மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது குறித்து போதுமான விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Rasipuram ,Rajeshkumar , Rasipuram: A cargo auto overturned near Rasipuram, in which 15 people, including a girl, were seriously injured. Informed immediately
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து