×

போடிமெட்டு மலைப்பகுதிகளில் தொடர்கதையாகும் காட்டு யானைகளின் அட்டகாசம்

*அச்சத்தில் விவசாய தொழிலாளர்கள்

*தடுப்பு நடவடிக்கைக்கு கோரிக்கை

போடி : போடி மெட்டு அருகில் தமிழ்நாடு எல்லை கடந்து கேரளப்பகுதிகளுக்குள் 13 காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாய தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

்தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தமிழக - கேரள எல்லையில் இருக்கிறது போடி மெட்டு. தமிழக எல்லை கடந்த உடன் கேரள பகுதிகளான பிஎல் ராவ், முதுவாக்குடி, சூரியநல்லி, கொழுக்குமலை, சுண்டல், தோண்டிமலை, தலக்குளம், கோரம்பாறை, பூப்பாறை, மூலத்துறை, யானை இரங்கல், பண்ணையார் டேம் ஆகிய பகுதிகளைச்சுற்றி ஏலம் மற்றும் தேயிலை தோட்டங்கள் அதிக அளவில் அமைந்துள்ளது.

குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் 2.50 லட்சம் ஏக்கர் அளவில் உள்ள தோட்டங்களில் தமிழக விவசாயிகளும், தொழிலாளர்களும் தங்கியிருந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் பணிகளை மேற்கொள்ளும் ஏலத்தோட்டத்திற்குள்ளேயே வீடுகள் கட்டி அங்கேயே குளிர், வெயில், காற்று, மழை என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் எதிர்கொண்டு பணப்பயிர்களான ஏலம், காபி, மிளகு, தேயிலை உள்ளிட்டவற்றை விளைவிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதுபோல் அந்த தோட்டங்களில் வசிக்கும் தமிழர்களின் உழைப்பின் எதிரொலியாக சர்வதேச நாடுகளுக்கு தரம் மிக்க ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக நம் நாட்டிற்க அதிக அளவில் அன்னிய செலாவணி கிடைக்கிறது.

போடிமெட்டு அருகில் சுமார் 15 கி.மீ தொலைவிற்குள் இருக்கும் மலைக் கிராமங்களுக்குள் அடர்ந்த வனங்களும் அதை சார்ந்த மதிகெட்டான் மலையும் சேர்ந்து இருப்பதால் எப்போதும் பனிமூட்டத்துடன் கடும் குளிருக்கு குறைவே இருக்காது. இந்த மலை கிராமங்களுக்கு நடுவில் யானைகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.இவை கூட்டம் கூட்டமாக சுற்றிவரும் பசுமைப்பகுதியாக இந்த தோட்டங்கள் உள்ளன. இதனால் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் உள்ளது. ஏலக்காய் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு வாகன போக்குவரத்திறக்காக கேரள மாநிலம் கொச்சினில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மலைச்சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2015ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்கம், உயர்ந்த பாலங்கள், தடுப்புச்சுவர்கள் உள்ளிட்ட பணிகள் தொடரும் நிலையில் தற்போது 90% வரை முடிவுக்கு வந்துள்ளது. இந்த சாலை பணிகள் காரணமாக அதிக எண்ணிக்கையில் அப்பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் சரிவர உணவு கிடைக்காமல் இருப்பதுடன், பெரிய அட்டைகள், அதிகளவு ஈக்கள் கொசுக்கள் உற்பத்தியாவதால் வனத்திற்குள் இருந்து யானைக் கூட்டங்கள் பிரதான சாலைகளிலும், இணைப்புச் சாலைகளிலும், தோட்டப்பகுதிகளுக்குள்ளும் அன்றாடம் விசிட் அடிப்பது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இங்கே கொம்பன் என்ற படையப்பா யானை ஒற்றையாக சுற்றிக்கொண்டு பலரையும் அச்சுறுத்தி வருகிறது. அதோடு ஏலத்தோட்டங்களுக்குள் காட்டுப் பன்றிகளின் கூட்டங்களும், குரங்குகளும் ஏராளமாக சுற்றி வருவதுடன், ஏலப்பயிர்களையும் நாசம் செய்து இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதற்கிடையே இப்பகுதியில் தற்போது 13 யானைகள் சேர்ந்து ஒரு கூட்டமாக இரங்கல் டேமிலிருந்து சுற்றி வருகிறது, இதில் 5 யானைகள் ஒரு பக்கமாகவும், கொம்பன் என்ற படையப்பா ஒரு புறமும், 8 யானைகள் குட்டிகளுடன் மற்றொரு புறமும் சுற்றி வருவதால் விவசாய தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த யானைகளால் மாதம் ஒருமுறை ஏதாவது ஒரு வகையில் மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக போடி பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் குடும்பத்தினை சேர்ந்த சிலர் யானைகளின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். போடி மெட்டு கடந்தவுடன் இந்தப் பகுதி மலை கிராமங்களுக்குள் காலையில் தொடங்கி இரவு என பாராமல் 24 மணி நேரமும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும், சுற்றுலா வாகனங்களையும் யானைகள் சுற்றி வளைப்பதும், விரட்டுவதும் நடக்கிறது. இதனால் இப்பகுதியில் இருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் வேலைக்குச்சென்று மீண்டும் வீடு திரும்புவது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழக அரசோடு கேரள அரசும் சேர்ந்து கூட்டு நடவடிக்கை எடுத்து இதுபோல் சுற்றி வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்டினால மட்டுமே தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி கனகராஜ் கூறுகையில், மலை கிராமங்களிலும் உள்ள ஏலம் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் தொடர்ந்து இரவு பகல் பாராமல் 13 யானைகள் வலம் வருகின்றன. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த மலை கிராமங்கள் முழுவதுமே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு இதை விட்டால் வேறு தொழில் தெரியாது. இந்நிலையில் வனவிலங்குகளை எதிர்கொண்டும் குறிப்பாய் யானைகளின் அச்சுறுத்தலையும் இவர்கள் தொடர்ச்சியாக சந்திக்க வேண்டியதாக உள்ளது. எனவே தமிழக, கேரள அரசுகள் இணைந்து இதுபோல் சுற்றிவரும் யானைகளை அடர்ந்த காட்டுக்குள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



Tags : Bodimetu Hills , Bodi: 13 wild elephants are constantly rampaging through the Tamil Nadu border near Bodi Mettu and into the Kerala region.
× RELATED வானூர் முன்னாள் எம்எல்ஏ மறைவு முதல்வர் இரங்கல்