×

நாகர்கோவிலில் குடியரசு தின கலைநிகழ்ச்சிகள் ஒத்திகை-450 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

நாகர்கோவில் : நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ஒத்திகையில் 450 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.நாடு முழுவதும் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் 26ம் தேதி நடக்கிறது. விழாவில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு தேசியகொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்கிறார். விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் அவர்களது பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் தொடர்பான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில் டதி பள்ளியில் நேற்று காலையில் நடந்த ஒத்திகையில் மாவட்டத்தில் உள்ள 6 பள்ளிகளை சேர்ந்த 450 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உட்பட அதிகாரிகள் ஒத்திகையை பார்வையிட்டனர்.
இதனை போன்று குடியரசு தினத்தன்று போலீஸ் அணி வகுப்பில் பங்கேற்கும் போலீசார் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

குடியரசு தினவிழா விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்ற அண்ணா விளையாட்டு அரங்கம் முழுமையாக சீர் செய்யப்பட்டு அரங்கம் முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குமரி மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் பலத்த சோதனைகள் நடந்து வருகிறது. இவற்றில் ஏற்கனவே ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

45 நிமிடங்கள் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள்

குடியரசு தினவிழாவையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் மொத்தம் 45 நிமிடங்கள் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வேங்கோடு பெத்தானியா நவஜீவன் பள்ளி, ராமன்புதூர் லிட்டில் பிளவர், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலை பள்ளி, கண்டன்விளை அரசு மேல்நிலை பள்ளி, கொட்டாரம் அரசு மேல்நிலை பள்ளி, தெங்கம்புதூர் அரசு மேல்நிலை பள்ளி, எஸ்.எல்.பி அரசு மேல்நிலை பள்ளி, மேலகிருஷ்ணன்புதூர் அரசு நடுநிலை பள்ளி, பத்துகாணி அரசு பழங்குடியினர் நல மேல்நிலை பள்ளி, கிருஷ்ணன்கோயில் இந்து வித்யாலயா, ஆற்றூர் என்.வி.கே.எஸ் பள்ளி, ஆசாரிபள்ளம் பெல்பீல்டு பள்ளி ஆகிய பள்ளிகள் சார்பில் மாணவ மாணவியர் பங்கேற்கின்ற 45 நிமிட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் யோகா, பரத நாட்டியம், தேச பக்தி பாடல்கள் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.



Tags : Republic Day ,Nagercoil , Nagercoil: 450 students participated in the rehearsal of the Republic Day art program in Nagercoil. Republic of India across the country
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை