தூத்துக்குடியில் ஹெராயின் என்று கூறி போலி போதைப்பொருள் விற்க முயன்றவர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஹெராயின் என்று கூறி போலி போதைப்பொருளை விற்க முயன்றவரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 10 கிலோ யூரியா உரம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி டவுன் மற்றும் ரூரல் சப் டிவிசன் பகுதிகளில் போதைப்பொருட்களை புழக்கத்தை தடுக்க எஸ்பி பாலாஜி சரவணன் தனிப்படை அமைத்துள்ளார். இதில் சிப்காட் ஏட்டு பென்சிங், தென்பாகம் ஏட்டுகள் ஜெகதீஷ், பிரகாஷ், தாளமுத்துநகர் ஜான்சன் மற்றும் புதியம்புத்தூர் பிரகாஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இத்தனிப்படையினர், வடபாகம் இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்ஐ சிவராஜா ஆகியோரது தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எஸ்.எஸ்.மார்க்கெட் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிய ஒருவரை மடக்கினர். அவரிடம் இருந்த பையில் சீனி போன்ற பொருள் பாக்கெட்டுகளாக இருந்தன. இதனால் சந்தேகமடைந்த தனிப்படையினர், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அவர், தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த ரீகன்(42) என்பதும், 1 கிலோ எடை கொண்ட 10 பாக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. பாக்கெட்டுகளில் யூரியா உரம் போன்று இருந்துள்ளது. இதனை போலீசார், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், யூரியா உரம் போன்ற பொருளை ஹெராயின் என்று கூறி சிலரிடம் ரீகன் விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. 1 கிலோ ரூ.1 லட்சம் என்றும் அவர் பேரம் பேசியுள்ளார். அவரை வடபாகம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இதுபோன்ற 1 கிலோ போலி போதைப்பொருளுடன் ரீகனை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது.கடந்த மாதம் படிகாரத்தை கிறிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என்று போலியாக விற்க முயன்ற இருவர், தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: