×

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி வாகன சோதனையில் சிக்கிய 500 கிலோ குட்கா: போலீசார் விசாரணை

கன்னியாகுமரி: பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சட்ட விரோதமாக வைக்கோல் கட்டுகளுக்கிடையே மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். தமிழக அரசு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்துள்ளது ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து போதை பொருட்கள் சகஜமாக கடத்தி வரப்படுகிறது. இதனை பலரும் கொள்ளை லாபத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ வை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், வைக்கோல் கட்டுகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 500 கிலோ புகையிலை பொருட்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 6 லட்சம் ரூபாய் என்ற நிலையில், மினி டெம்போ மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஓட்டுநர் பீர் முகமது 39 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : Kannyakumari ,Bangalore , 500 Kg Gutka Caught in Kanyakumari Vehicle Check from Bangalore: Police Investigation
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...