சென்னை: சென்னையில் குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரை சாலையில் 3-வது மற்றும் இறுதி ஒத்திகை நடந்து வருகிறது. முப்படை, காவல்துறை, உள்ளிட்ட துறைகளின் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுகிறது.
இதனால் இந்த ஆண்டு குடியரசு தின விழா, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதில் முப்படை, தேசிய மாணவர் படை, காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. மேலும் 2 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின விழாவில் மீண்டும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. தமிழக அரசின் 20 துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
