அடுத்தடுத்து மேம்பாலங்கள் வளர்ச்சி அடையும் வடசென்னை: பொதுமக்களின் பல ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு, மழைக்காலத்தில் தீவுபோல தத்தளித்த மக்கள் நிம்மதி

பெரம்பூர்: வடசென்னை என்றாலே ஒரு காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி என்று இருந்த நிலை மாறி, தற்போது மேம்பாலங்கள் மூலம் இதை சென்னையின் மையப் பகுதியாக தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது. மழைக்காலங்களில் வடசென்னை பகுதி சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்டு வீடுகளுக்கு செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக, வடசென்னைக்கு உட்பட்ட வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர் வழியாக செல்லும் பொதுமக்கள் மழைக்காலங்களில் ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றால் நீண்ட தூரம் சுற்றி செல்லக்கூடிய நிலைமைக்கு ஆளாகினர்.

பெரம்பூர், வியாசர்பாடி, கணேசபுரம், ஜீவா மற்றும் மூலக்கொத்தளம் பகுதியில் இருந்து வரும்போது அங்குள்ள வியாசர்பாடி ரயில்வே சப்வே உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வடசென்னையை தனித்தீவாக பார்த்து வந்தனர். அவர்களின் கனவை நனைவாக்கும் வகையில் பெரம்பூர் வழியாக செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல முரசொலி மாறன் மேம்பாலம் அமைக்கப்பட்டு மழைக்காலங்களில் வடசென்னையின் உள்ளே வருவதற்கு தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து, மின்ட் மற்றும் மூலக்கொத்தளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வியாசர்பாடி பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் வடசென்னைக்குள் வரும் வாகன ஓட்டிகள் மழைக் காலங்களில் ஓரளவிற்கு நிம்மதி பெருமூச்சு விட்டனர். பல ஆண்டுகளாக புளியந்தோப்பு பகுதியில் இருந்து அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக வியாசர்பாடி நோக்கி செல்லும் வாகனங்கள் ஜீவா கணேசபுரம் மேம்பாலம் பகுதி வழியாக செல்லும்போது மழைக் காலங்களில் கணேசபுரம் சப்வே கீழ் பகுதியில் பெருமளவு தண்ணீர் தேங்கி அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. மேலும், வளர்ந்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கணேசபுரம் சப்வே பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பல ஆண்டுகளாக இதற்கு தீர்வு ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்னை மாநகராட்சி மூலமாக அங்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ரூ.142 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் மேம்பாலம் கட்டும் பணியை தொடங்க உள்ளது. மாநகராட்சி நிதியின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கணேசபுரம் ரயில்வே மேம்பாலம் புதிய தொழில்நுட்பத்தில் சென்னை ஐஐடியின் அங்கீகாரத்துடன் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலம் 15.2 மீட்டர் அகலத்திலும், 600 மீட்டர் நீளத்திலும் கட்டப்படுகிறது.

புளியந்தோப்பு ஆடுதொட்டியில் இருந்து செல்லும்போது இரண்டு வழியாகவும் வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு வரும்போது இரண்டு வழியாகவும் மொத்தம் நான்கு வழிப்பாதையாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ஆடுதொட்டியை அடுத்த கால்வாய் பகுதியில் இருந்து மேம்பாலம் தொடங்கி ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வரை கட்டப்படுகிறது. இதற்காக, பல மாதங்களாக மண் பரிசோதனை செய்யப்பட்டு தற்போது அந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இந்த வாரத்தில் மேம்பால பணிகள் தொடங்கப்பட உள்ளன.

ரயில்வே பகுதியில் மட்டும் 58 மீட்டர் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. ரயில்வே பாதை உள்ள பகுதியில் 45 அடி உயரத்திற்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. வில்லிவாக்கத்தில் ரயில்வே மேம்பாலத்தில் பயன்படுத்தப்பட்டது போல முற்றிலும் இரும்பு பீம்களால் பாலம் அமைக்கப்படுகிறது. கான்கிரீட்டுக்கு பதிலாக இரும்பு ரேடர்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இந்த மேம்பாலம் கட்டி முடிக்க இரண்டு வருடம் ஆகும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மேம்பால பணிக்காக அப்பகுதியில் இந்த வாரத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு 2025 ஜனவரி 20ம்தேதி வரை அமலில் இருக்கும் எனவும், அதன்படி இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை எம்பிஎம் சாலை சந்திப்பில் இருந்து கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதைக்கு வந்து செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு வியாசர்பாடி மார்க்கத்தில் இருந்து டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை எம்பிஎம் சாலை சந்திப்பில் இருந்து ஸ்டீபன்சன் லேன் வழியாக டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பு அடைந்து கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை கடந்து செல்லலாம்.

இதேபோன்று புளியந்தோப்பு மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து எம்பிஎம் சாலை சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையாக டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை ஸ்டீபன்சன் லைன் வழியாக எம்பிஎம் சாலை சந்திப்பு அடைந்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து மேம்பாலம் திறக்கப்படும் பட்சத்தில் வடசென்னை மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறும் என வடசென்னை மக்கள் தெரிவித்தனர்.

* அரசுக்கு ஒத்துழைக்க எம்எல்ஏ வேண்டுகோள்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.டி.சேகர் மேம்பாலம் குறித்து கூறியதாவது: இரண்டு முறை இந்த தொகுதியில் தேர்தலில் நிற்கும்போது பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சட்டமன்றத்தில் பலமுறை பேசி உள்ளேன். 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்காக அறிவிப்பு வெளியானது.

தற்போது மண் பரிசோதனை உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகள் முடிவடைந்து மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் வடசென்னை மக்களின் நீண்ட கால பிரச்னை தீர்க்கப்பட உள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பூரில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி முரசொலி மாறன் மேம்பாலம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டபோது அது பெரிய அளவில் பேசப்பட்டு வடசென்னைக்குள் மழைக்காலத்தில் மக்கள் வர பெரிதும் உதவியாக இருந்தது.

அதேபோன்று தற்போது வியாசர்பாடி கணேச புரம் மேம்பாலம் கட்டி முடிக்கும் பட்சத்தில் வடசென்னை பகுதி மக்கள் மழைக் காலங்கள் மட்டுமல்லாமல் தினமும் வேலைக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வார்கள். இதற்காக இரண்டு ஆண்டுகள் பொதுமக்கள் மாற்றுப் பாதை வழியாக செல்லும் போது மாற்றுப்பாதையை முறையாக பயன்படுத்தி அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: