சென்னை மாநகர காவல்துறையில் நிலுவை வழக்கு போதை வாகன ஓட்டிகள் 8,912 பேரிடம் அபராதம் வசூலிக்கும் பணி தீவிரம்: அபராதம் செலுத்தாத 263 பேரின் வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது விதிக்கப்படும் அபராதம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சட்டத்தை ஒன்றிய அரசு கடுமையாக்கியுள்ளது. அதைதொடர்ந்து தமிழகத்திலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது பரிசோதனைகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சட்டம் கடுமையானதால் வாகன ஓட்டிகள் பலர் போதையில் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்கள், நாங்கள் நீதிமன்றம் மற்றும் ஆன்லைன் மூலம் அபராத தொகையை கட்டிவிடுகிறோம் என்று கூறி அதற்கான சலான்களை மட்டும் வாங்கி செல்கின்றனர். ஆனால், சொன்னபடி போதையில் வாகனம் ஓட்டிய நபர்கள், அபராத தொகையை கட்டாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் போதையில் வாகனம் ஓட்டியதாக 8,912 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

எனவே நிலுவையில் உள்ள போக்குவரத்து வழக்குகளின் அபராத தொகையை வசூலிக்கும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் மேற்பார்வையில் 10 போக்குவரத்து கால் சென்டர்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் போன் செய்து, நினைவுபடுத்தி அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் அபராத தொகை வசூலிக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை 12 காவல் மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடந்தது.

அதில் 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் நினைவூட்டலை தொடர்ந்து 194 பேர் அந்தந்த மாவட்ட போக்குவரத்து காவல் சிறப்பு மையங்களில் ஆஜராகி நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக இணையதளம் மூலம் தங்களது அபராத தொகையை செலுத்தினர். மேலும், 231 வாகன ஓட்டிகள் நீதிமன்றங்கள் மற்றும் தபால் நிலையங்கள், இ-சென்டர்கள் மூலம் தங்களது அபராத தொகையை செலுத்தியுள்ளனர். அந்த வகையில் கடந்த 21ம் தேதி நடந்த சிறப்பு முகாம் மூலம் 425 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதமாக 43 லட்சத்து 96 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துகள் உள்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாத 263 பேரின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு நீதிமன்ற ஆணை பெற்று பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: