×

15 சதவீதம் முதலியார் ஓட்டுக்காக சந்திப்பு இபிஎஸ் அணியை ஆதரிக்க ஏ.சி.எஸ். மறுப்பு: பாஜவுக்கு மட்டுமே ஆதரவு என தெரிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 15 சதவீதம் உள்ள முதலியார் சமூக ஓட்டுக்காக, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை எடப்பாடி அணியினர் நேற்று சந்தித்து ஆதரவு கேட்டனர். ஆனால், அவரோ பாஜவுக்கு மட்டுமே ஆதரவு என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் (ஓபிஎஸ் - இபிஎஸ்) போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி கட்சி தலைவர்களை குறிப்பாக சிறிய கட்சியாக இருந்தாலும் அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்து வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 15 சதவீதம் பேர் உள்ளனர். இதனால், அவர்களது வாக்குகளை பெற, ஏ.சி.சண்முகத்தைச் சந்திக்க, சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று மாலை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் சென்றனர்.

அப்போது, இடைத்தேர்தலில் புதிய நீதி கட்சி ஆதரவை அதிமுகவுக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்கள் சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், 2014ம் ஆண்டு முதல் பாஜ கூட்டணியில் இருக்கிறேன். அப்போது நடந்த மக்களவை தேர்தலில் அக்கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிட்டேன். இதனால் என்னுடைய ஆதரவு பாஜவுக்குத்தான். அக்கட்சி எடுக்கும் முடிவுதான் என்னுடைய முடிவும் என்று தெரிவித்தார். ஏ.சி.சண்முகத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே, தமிழக முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியனும், பாஜகவுக்கு மட்டுமே ஆதரவு என்று தெரிவித்து விட்டார். அவரைப்போல ஏ.சி.சண்முகமும் தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : ACS ,EPS ,BJP , ACS to back EPS team in meeting for 15 percent Mudaliyar vote DISCLAIMER: Indicated as support for BJP only
× RELATED சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள...