47வது செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதம்: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்

சென்னை: 47வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் பாராட்டு கடிதம் வழங்கி கமிஷனர் சங்கர் ஜிவால் சிறப்பித்தார். சென்னை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரையும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பணிகளை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.

அந்த வகையில், கடந்த 2022 ஆண்டு மாமல்லபுரம் பகுதியில் நடந்த 47வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போதும், துவக்க விழா மற்றும் நிறைவு விழாவின் போதும் சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணிபுரிந்த உதவி கமிஷனர்கள் முதல் கூடுதல் கமிஷனர்கள் வரையிலான 109 காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்களும், 246 இன்ஸ்பெக்டர்களுக்கு மெச்சத்தகுந்த பணிக்கான பதிவும், எஸ்ஐக்கள் முதல் காவலர்கள் வரையிலான 6,280 பேருக்கு சிறந்த பணிக்கான பதிவும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு கடிதங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்கா, தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: