×

தை மாத முகூர்த்த தினங்கள் காஞ்சி பட்டு சேலை கடைகளில் அலைமோதியது மக்கள் கூட்டம்

சென்னை: தை முகூர்த்த நாட்களை தொடர்ந்து, பட்டு சேலை எடுக்க உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் காஞ்சிபுரம் பட்டுக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயில்களின் நகரமான காஞ்சிபுரம் பட்டு நெசவிற்கும் புகழ்பெற்றது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு காஞ்சி பட்டுடுத்தி அழகுக்கு அழகு சேர்க்க வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து காஞ்சிபுரம் பட்டு சேலைகளை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்கழி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறாததால் தை மாதம் அதிக அளவில் திருமண முகூர்த்தங்கள் இருக்கும். மேலும், பொங்கல் பண்டிகை முடிந்ததும், தொடர்ந்து வரும் மயிலார் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தறி நெய்வோர், சலவையாளர் முதலிய உழைக்கும் வர்க்கத்தினர் பொங்கல் பண்டிகைக்கு பிறகு மயிலார் பண்டிகை வரை பணி செய்யாமல் ஓய்வு நாட்களாக மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர்.

இதனால், காஞ்சிபுரத்தில் பெரும்பாலான பட்டு ஜவுளி கடைகள் மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று பொங்கல், மயிலார் பண்டிகை முடிந்த முதல் நாள் என்பதால் காஞ்சிபுரத்தில் பட்டு சேலை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் காந்தி சாலை, ரங்கசாமி குளம், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் திணறினர்.

Tags : Crowds throng Kanchi silk saree shops on the Mukurtha days of Thai month
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...