கலைஞர் நகரில் ரூ.28.40 கோடியில் கட்டப்பட்ட புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையம் வரும் 28ம் தேதி முதல்வர் திறக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை:  புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையத்தை வரும் 28ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, கலைஞர் நகரில் உள்ள புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையம் ரூ.28.40 கோடியில் உலக வங்கி நிதி உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டிடத்தில் பயன்படுத்தி கொள்வதற்கும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருக்கிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் சேர்த்து ரூ.11.43 கோடியில் உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.39.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் என்கிற வகையில் பணிகள் முடிந்தள்ளது. இந்த கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 28ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். இந்த மையத்தில் பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. கட்டிடத்தை திறந்து வைத்து செயற்கை கால்கள் தேவைப்படுகிற மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

மேலும் சக்கர நாற்காலிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அரசிடம் விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் அத்திட்டத்தின்படி சக்கர நாற்காலிகள் வழங்க உள்ளார். தமிழ்நாட்டில் காப்பீட்டு திட்டம் என்பது ஏறத்தாழ 1.5 கோடி நெருங்கும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவர்கின்ற வகையிலான திட்டமாக காப்பீட்டு திட்டம் இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: