திருவொற்றியூர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய 3 காதல் ஜோடிகள்: மீன்பிடிவலை மூலம் மீனவர்கள் மீட்டனர்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கடலில் தடையை மீறி குளித்தபோது, அலையில் இழுத்துச்செல்லப்பட்ட 3 காதல் ஜோடிகளை மீனவர்கள் மீன்பிடி வலைகள் மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர், எண்ணூர் கடல் பகுதி ஆழமாகவும் கூர்மையான கருங்கற்கள் கொண்ட பகுதியாகவும்  இருப்பதால் கடலில் குளிக்கக் கூடாது என காவல்துறை, மாநகராட்சி தடை விதித்துள்ளது. ஆனால், தடையை பொருட்படுத்தாத இளைஞர்களும், சிறுவர்களும் குளிப்பதால் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் கடல் பகுதிக்கு வந்திருந்தனர். மாலை கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மூன்று காதல் ஜோடிகள் சிறிது நேரம் கழித்து கடலில் குளித்தனர். அப்போது ஆர்ப்பரித்து வந்த ராட்சத அலையில் 6 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு உயிருக்கு போராடி தத்தளித்தனர். இதை பார்த்து கரையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

உடனே கரையில் அமர்ந்து வலை பின்னிக் கொண்டிருந்த மீனவர்கள் ஓடி வந்து மீன்பிடி வலைகளை வீசி 6 பேரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பெற்றோருக்கு தெரியாமல் கடற்கரையில் அமர்ந்து பேசுவதற்காக வந்த காதல் ஜோடிகள் இவர்கள் என்பதால் அங்கு இருந்த மீனவர்கள் கடலில் குளிக்க கூடாது என்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சினிமாவில் வருவதுபோல இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: