‘தமிழ்நாடு’ என்று ஆளுநர் குறிப்பிடுவது அரசுக்கு வெற்றி: அமைச்சர் ரகுபதி பெருமிதம்

புதுக்கோட்டை: ‘தமிழ்நாடு’ என்று ஆளுநர் குறிப்பிட்டது அரசுக்கும், மக்களின் உணர்வுக்கும் கிடைத்துள்ள வெற்றி என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை வடக்குராஜ வீதியில் உள்ள நகர்மன்ற வளாகத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் பல்வேறு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நீட் தொடர்பாக ஒன்றிய அரசிடமிருந்து மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. அதை மக்கள் நல்வாழ்வுத்துறை பரிசீலித்து வருகிறது.

ஒரு வாரத்தில் அமைச்சர் விளக்கம் தருவதாக தெரிவித்துள்ளார். தன்னார்வலர்கள், ஆசிரியர்களை கொண்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சிறுவர், சிறுமியர்கள் திருந்தி வாழ்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. தற்போது ஒன்றிய அமைச்சர், ஆளுநரால் தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. இது தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிக்கும், தமிழ்நாடு மக்களின் உணர்வுக்கும் கிடைத்துள்ள வெற்றி. ஏனென்றால் தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ் ‌மொழி உணர்வு, இன உணர்வு மங்கிபோவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். எல்லா பக்கத்தில் இருந்தும் எதிர்ப்பலைகள் தோன்றியதன் விளைவாக தற்போது  தமிழ்நாடு என்ற பெயர் ஒன்றிய  அரசாலும், ஆளுநராலும் சொல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: