மீடியாவில் வரவேண்டும் என்று ஏடாகூடமாக பேசுகிறார் அரசை குறை கூறுவதுதான் அண்ணாமலைக்கு வாடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அரக்கோணம்: ‘தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டாலும் குறைகூறுவதே அண்ணாமலைக்கு வாடிக்கையாக உள்ளது’ என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் 1,100 ஆண்டுகள் பழமையான மங்கள லட்சுமி சமேத அழகு ராஜபெருமாள் கோயில் உள்ளது. இப்கோயிலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் சமீபத்தில் அகற்றப்பட்டது. மேலும், சிதிலமடைந்த கோயிலை ரூ.7 கோடி மதிப்பீட்டில் உபயதாரர்கள் மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதற்கு அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இதில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில், ‘இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.3,943 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பில் இருந்த 1,000 ஏக்கர் நிலங்களும் மீட்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்கள் கண்டறியப்பட்டு, திருப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம் அருகே நடந்த கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்.

இனிவரும் காலங்களில் இதுபோன்று விபத்துக்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். தனியார் கோயிலாக இருந்தாலும் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு விழாக்கள் நடத்த வேண்டும். தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டாலும், அண்ணாமலை நாள்தோறும் குறைகூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். மீடியாவில் அவரைபற்றி வரவேண்டும் என்று ஏடாகூடமாக ஏதாவது பேசிவருகிறார். ஒரு ஐபிஎஸ் படித்த அதிகாரி அதற்கேற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: