×

கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்பி ஐகோர்ட்டில் மேல்முறையீடு: மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது

சென்னை: கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து, அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி, கடந்த 2018ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறித்த காலத்துக்குள் மனு தாக்கல் செய்யாமல், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனக்கூறி கே.சி.பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2020 மார்ச் முதல் 2021 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாததால் 2021 அக்டோபருக்கு பின் 90 நாட்கள் அவகாசம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. அதனால், குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது தவறு.

அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தன்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை. தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு 25 நாட்கள் தாமதத்தை ஏற்று வழக்கை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

Tags : AIADMK , AIADMK ex-MP appeals against expulsion from party: Petition to be heard soon
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...