கோயில்களில் அன்னதான திட்டத்துக்கு கூட்டுறவு அங்காடிகளில் இருந்து மளிகை பொருள் வாங்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: கோயில்களில், அன்னதான திட்டத்துக்கு தேவையான மளிகை பொருட்களை, கூட்டுறவு அங்காடிகளில் கொள்முதல் செய்ய அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில் 764 கோயில்களில், அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்கான அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அனைத்தும் கூட்டுறவு அங்காடிகளிலும், இதர கோயில்களில் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யப்படுகின்றன. அன்னதானத் திட்டத்தின் கீழ் கோயில்களில் உணவருந்தும் பக்தர்களுக்கு தரமான உணவினை வழங்குவது கோயிலின் இன்றியமையாக் கடமையாகும். இதற்கு தரமான அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்வது அவசியமாகிறது. வெளி சந்தையினை ஒப்பிடுகையில் தமிழக அரசின் ஓர் அங்கமான சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு அங்காடிகளில் தரமான பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. எனவே  இனி வரும் நாட்களில் அன்னதானத் திட்டத்துக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருட்களை தமிழ்நாடு அரசின் கூட்டுறவு அங்காடிகளில் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.

Related Stories: