×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இளங்கோவன் வாழ்த்து: வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார்

சென்னை: ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினர். கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து ஈ.வி.கே.எஸ். ஆதரவு திரட்டினார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அவர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, முன்னாள் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சந்திப்பிற்கு பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் ஆதரவு தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் பிரசாரத்துக்கு அவர் அவசியம் வர வேண்டும் என்றோம். அவரும் பிரசாரத்துக்கு வருவதாக சொன்னார். அது மட்டுமல்ல, வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த 3, 4 நாட்களாக அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, காங்கிரஸ் தொண்டர்களும், திமுகவினரும் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பிரசாரம் செய்ததற்கு நன்றி. இடைத்தேர்தலில் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமாக உள்ளது.

தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் காவலராக இருக்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கண்டிப்பாக அவரின் நல்லாட்சிக்காக கூட்டணியின் கை சின்னத்தில் வாக்களிப்பார்கள். வேட்பாளர் தேர்வில் ஏன் இந்த மாற்றம் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. எங்களுடைய கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் விரும்பியதாலும், ராகுல்காந்தி, சோனியாகாந்தி, கார்கே சொல்லிய காரணத்தால் தேர்தலில் போட்டியிடுகிறேன். திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கியதே பெரிய விஷயம். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

வேட்பாளர் தேர்வு குறித்து எங்கள் மேலிடம் திமுகவுடன் கலந்து பேசியிருப்பார்கள் என்று நம்புகிறேன். மீண்டும் மக்களுக்காக, காங்கிரசுக்காக, திமுக கூட்டணிக்காக வேலை செய்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருப்பதாக  கருதுகிறேன். எல்லா கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து விட்டு பிராசாரத்தை தொடங்குவேன். காங்கிரஸ் தலைவர்களையும் பிரசாரத்துக்கு வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். எங்களை பொறுத்தவரையில் வெற்றியில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், எதிர் அணியில் இருப்பவர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வந்தார். அவரை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்து சென்றார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தினார்.

Tags : Ilangovan ,Chief Minister ,M.K.Stalin ,Erode East ,Vaiko ,Thirumavalavan , Ilangovan congratulates Chief Minister M.K.Stalin on announcement of Erode East by-election candidate: Vaiko, Thirumavalavan also met other leaders
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து