×

ஆறுதல் வெற்றி ஆசையில் நியூசி: ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா

இந்தூர்: ஒருநாள் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்ட நிலையில், இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் வென்று நியூசியை  ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்தியாவும், ஆறுதல் வெற்றி ஆசையில் நியூசிலாந்தும் களம் காண உள்ளன. இந்தியா வந்துள்ள  நியூசிலாந்து அணி தலா 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள்,டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.  ஒருநாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களையும் இந்திய அணி வென்றதுடன் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தொடரையும் கைப்பற்றி விட்டது. அத்துடன் நியூசிக்கு எதிராக தொடர்ந்து 2 தொடர்களை இழந்திருந்த இந்தியா இந்த முறை தொடரை வென்று பதிலடி கொடுத்துள்ளது.

பதிலடியில் இன்னும் பாக்கி உள்ளது. நியூசியிடம் ஏற்கனவே இழந்த 2 தொடர்களிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியிருந்தது. அதனால் இன்று நடைபெறும் 3வது ஒருநாள் ஆட்டத்தில் வென்று நியூசியை ஒயிட் வாஷ் செய்து முழுமையான பதிலடியை தர இந்தியா முனைப்பாக உள்ளது. அதற்காக ரோகித் சர்மா தலைமையிலான அணி மாற்றமின்றி களம் காணக் கூடும். அந்த நம்பிக்கையை ஷமி, சுப்மன் கில், கோஹ்லி, சூரியகுமார், ஸ்ரேயாஸ், உம்ரான், குல்தீப், வாஷிங்டன் ஆகியோர் கரைசேர்க்க காத்திருக்கின்றனர். இந்தியா ஏற்கனவே தொடரை வென்று விட்டதால், ஷபாஸ், ஸ்ரீகாந்த் பரத் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

டாம் லாதம் தலைமையிலான நியூசி அணியும்  கடைசி ஆட்டத்தில்  இந்தியாவை வீழத்தி ஆறுதல் வெற்றி பெறும் ஆசையுடன் களம் காண இருக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவை கடைசி வரை மிரள வைத்த மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் ஆகியோருடன் கிளென் பிலிப்ஸ், ஃபின் ஆலன்,  டாரியல் மிட்செல், லாக்கி பெர்கூசன் ஆகியோர் வெற்றியுடன் முடிக்க தீவிரம் காட்டுவார்கள். இந்தூர், ஹோல்கர் அரங்கில் இந்தியா இதுவரை  தோற்றதில்லை என்ற வரலாறு உள்ளது. அதனால் கடைசி ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Tags : Newsy ,India , Desiring a consolation victory, Newsy: Will India do a whitewash?
× RELATED சில்லி பாய்ன்ட்…