×

சட்டசபையில் உரை ஒன்றிய அரசை விமர்சித்த கேரள கவர்னர்: அரசு தயாரித்த உரையை வார்த்தை விடாமல் வாசித்தார்

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார். அப்போது, கேரள மாநில அரசு தயாரித்த உரையை ஒரு வார்த்தையை கூட விடாமல் வாசித்தார். ஒன்றிய அரசை விமர்சிக்கும் வாசகங்களும் கவர்னர் உரையில் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னர் ரவி கடந்த 9ம் தேதி உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை வாசிக்காமல் கவர்னர் ரவி தவிர்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், அம்மாநில கம்யூனிஸ்ட் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள உரசல் காரணமாக அவரது உரையின்றி சட்டப்பேரவையின் கூட்டத்தொடரை துவங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அரசின் முடிவில் திடீரென மாற்றம் ஏற்பட்டது.

அதன்படி 15வது கேரள சட்டசபையின் 8வது கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இதில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் உரையாற்றினார். அப்போது, கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததால் ஒன்றிய அரசுக்கு எதிராக உரையில் ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை கவர்னர் வாசிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசுக்கு எதிரான சில விமர்சனங்களை கவர்னர் தவிர்க்காமல் வாசித்தார். மாநில அரசு கடன் பெறுவதற்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதிக்கிறது.

சமீப காலமாக தேச ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும், மதசார்பின்மைக்கும் பல சவால்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் சாசன சட்டத்தை பாதுகாப்பதில் கேரள அரசு உறுதி பூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கேரள அரசு நிறைவேற்றிய பல மசோதாக்களில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் இன்னும் கையெழுத்து போடவில்லை. இந்த விவரங்களும் இன்றைய உரையில் இடம் பெற்றிருந்தது. சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் உடனுக்குடன் சட்டமாக மாற்றப்பட வேண்டும் என்று தனக்கு எதிராக உரையில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகங்களையும் கவர்னர் தவிர்க்காமல் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kerala ,Governor ,Union Government , Kerala Governor who criticized the Union Government in the Assembly: He read out the speech prepared by the government
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...