×

காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும்: ராகுல் காந்தி பேச்சு..!

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் என ராகுல் காந்தி எம்.பி.தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் நர்வால் பகுதியில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். சம்பா மாவட்டத்தில் உள்ள தப்பியால் கக்வால் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டபோது அங்கு இருந்த கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி எம்.பி.; ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இம்மாநில மக்களின் மிகப் பெரிய கோரிக்கையாகும். மாநில அந்தஸ்து விவகாரத்தைவிட பெரிய விவகாரம் வேறு இல்லை. உங்கள் உரிமை உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் கட்சி உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

நாங்கள் எங்கள் அனைத்து பலத்தையும் இதற்காகப் பயன்படுத்துவோம். தங்களின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் கேட்பதில்லை என்ற வேதனையை ஜம்மு காஷ்மீர் மக்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். ஜம்மு -காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மேலும், காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.

Tags : Congress party ,Jammu-Kashmir ,Rahul Gandhi , Congress party will use all its might to restore statehood for Jammu and Kashmir: Rahul Gandhi speech..!
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...