நாகர்கோவில்: நாகர்கோவில் சுங்கான்கடை ஐக்கியான்குளம் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பது வாகன ஓட்டிகளை வேதனை அடைய செய்துள்ளது. குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளும் மோசமாக கிடப்பதால் அதிக விபத்துக்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துக்களும், உயிர் பலிகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்கள் குண்டும், குழியுமாக உள்ளன.
இவற்றை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தற்போது ஆங்காங்கே சாலை சீரமைப்பு பணி நடக்கிறது. இந்த சாலையில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள ஐக்கியான் குளத்தின் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாததால், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி உயிர் பலிகளும் ஏற்பட்டன. எனவே வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதை தடுக்க, குளத்தையொட்டி தடுப்பு சுவர்கள் அமைத்து சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை (நாகர்கோவில் மண்டலம், திருநெல்வேலி வட்டம்) சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
அதன்படி டெண்டர் விடப்பட்டு, ரூ.4 கோடியே 83 லட்சத்து 25 ஆயிரத்து 384 மதிப்பில் சாலையின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள், கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. பணிகள் தொடங்கி சுமார் 5 வருடங்கள் ஆகியும் இன்னும் முடிவடையாமல் கிடப்பில் உள்ளது. இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஐக்கியான்குளம் பகுதியில் விபத்துக்கள் குறைந்த பாடில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் ஆபத்தான நிலையில் இந்த பகுதியை கடந்து செல்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன. நான்கு வழிச்சாலை பணிகள் கிடப்பில் உள்ளதால், தற்போது நடைமுறையில் உள்ள என்.எச். 47, என்.எச். 47 பி ஆகிய சாலைகளை தான் வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த சாலையில் தொடங்கிய தடுப்பு சுவர் பணிகளை முழுமையாக முடிக்காமல் 5 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு இருப்பது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மோசமாக கிடக்கும் சாலையை சீரமைப்பதுடன், ஐக்கியான்குளம் பகுதியிலும் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்காத காண்ட்ராக்டர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். வேகமாக பணிகளை முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது பணிகளை காரணமின்றி கிடப்பில் போடாமல், காண்ட்ராக்டர்கள் விரைந்து முடிப்பார்கள் என்றனர்.