×

ஒரே நேரத்தில் 72 பேர் பயணிக்கலாம்; ரூ.75 லட்சத்தில் புதிய வின்ச் பெட்டி பழநி கோயிலுக்கு அர்ப்பணிப்பு: அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு

பழநி: பழநி கோயிலுக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய வின்ச் பெட்டி அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் ஒரே நேரத்தில் 72 பேர் பயணிக்கலாம். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப்காரும், மேற்கு கிரி வீதியில் இருந்து வின்ஞ்சும் இயக்கப்படுகிறது.

இதில் முதலாவது வின்ச் 1966ம் ஆண்டு 36 பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. 2வது வின்ச் 1981ம் ஆண்டு 32 பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. 3வது வின்ச் 1988ம் ஆண்டு 36 பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த வின்ச்சின் பயண தூரம் 290 மீட்டர் ஆகும். பயண நேரம் 8 நிமிடங்கள் ஆகும். குறைந்த அளவிலான பக்தர்களை  மட்டுமே ஏற்றி செல்ல முடிவதால் வின்ச்சில் பயணிக்க பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

இந்நிலையில், பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் சார்பில் நேற்று புதிதாக வடிவமைக்கப்பட்ட அதிக நபர்கள் பயணிக்கும் வகையிலான வின்ச் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார், பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், பழநி கோயில் இணைய ஆணையர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த புதிய வின்ச் பெட்டியில் ஒரே நேரத்தில் 72 பேர்  பயணிக்கலாம். தைப்பூச திருவிழாவிற்கு பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : New Winch Box Palani Temple ,Minister ,MLA , 72 people can travel at the same time; Dedication of new winch box at Rs 75 lakh to Palani Temple: Minister, MLA participation
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...